தற்போது ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை சின்னத்தம்பி யானைதான். சின்னத்தம்பி யானை பற்றி சிறு அறிமுகமாக பார்ப்போம். கோவையில் பெரிய தடாகம் பகுதியில் நேற்றோ அல்லது இன்றோ புதிதாக வந்த காட்டு யானை அல்ல சின்னத்தம்பி கடந்த 18 வருடங்களாக சின்னத்தம்பியும் அ்தன் சகோதரனும் ஆன விநாயகனும் பாதுகாத்து வந்த வனப்பகுதி தான் இந்த இடம்.
காடுகளில் இவைகள் உண்ணும் மூங்கில்களும் இலைகளும் பழங்களும் போதிய அளவு தண்ணீரும் கிடைக்காத பட்சத்தில் தான் இவை ஊருக்குள் உணவைத் தேடி வருகின்றன. ஆச்சர்யம் என்னவெனில் கடந்த 18 ஆண்டுகளில் ஒருவரைக்கூட இந்த இரண்டு யானைகளும் காயப்படுத்தியதில்லை என்பதுதான். அவ்வாறு மனிதனோடு ஒன்றி வாழ கற்றுக் கொண்ட இந்த யானைகளுக்கு மனிதனாலேயே தான் ஆபத்து நேரிடும் என நினைத்திருக்காது. முதலில் இதனது சகோதர யானையான விநாயகனை பிடித்து முதுமலை காட்டிற்கு அனுப்பி உள்ளனர் வனத்துறையினர். அங்கு சகோதரனை பிரிந்த துக்கத்தில் உணவருந்தாது இருக்கிறது விநாயகன். சில வாரங்கள் கழித்து இந்த சின்னத் தம்பியை கும்கி வைத்து கொடுமைப்படுத்தி அதன் தந்தத்தை உடைத்து ரத்த காயங்களுடன் பிடித்து சென்றிருக்கின்றனர்.
மனிதனால் காயங்களும் வேதனைகளும் ஏற்பட்ட பிறகு யானை மூர்க்கமாக நடந்து கொள்ளும் என எண்ணியவர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது சின்னத்தம்பி. தன்னுடைய அமைதியான வழியில் மக்களை பயமுறுத்தாமல் இயல்பாக தன் கால் போன போக்கில் உறவுகளை தேடிக்கொண்டிருக்கிறது. ஒரு குடும்பத்தை விட்டு பிரித்த சோகத்துடனேயே காணப்படுகிறது. காடுகளில் மனிதனின் ஆக்கிரமிப்பும் அவைகள் வாழ்ந்த இடங்களில் சொகுசு பங்களாக்களை கட்டுவதும் மலைகளை குவாரிகளாக மாற்றி வெடி வைப்பதால் பயந்து ஓடி வரும் இந்த அப்பாவி யானை கூட்டங்கள் வயல்களில் வைக்கும் மின்சார வேலிகளிலும் ரயில் தண்டவாளங்களில் அடிபட்டு இறப்பது வாடிக்கையாக இருக்கிறது. இந்த யானைகள்தான் காடுகளில் வளர்ச்சிக்கும் கட்டமைப்பிற்கும் பெரும்பங்காற்றும் காட்டு ராஜாக்கள். காட்டிற்குள் அமைத்துள்ள தண்ணீர் தொட்டிகளில் சரிவர தண்ணீரை நிரப்பி மூங்கில் மரங்களையும் வளர்த்து அவைகளுக்கான உணவுக்கு வனத்துறையினர் வழி செய்தால் இவை மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு வருவதை தவிர்க்கலாம். இந்த உலகம் மனிதன் மட்டும் வாழ உண்டாகவில்லை என்பதுதான் உண்மை இந்த விலங்குகளும் வாழ சம உரிமை பெற்றவை தான் அவைகளுக்கான வாழ்விடத்தை அவைகளுக்கே விட்டுக் கொடுப்பது தான் நியாயமும் கூட. இந்த சின்னத் தம்பியை கும்கியாக மாற்றாமல் அதனது சகோதர யானையான விநாயகன் உடன் சேர்த்து வைத்து காட்டிற்குள் விட வேண்டும் என்பதே வன ஆர்வலர்களின் கருத்தும் நம்மில் பலரது வேண்டுகோளும் ஆகும்...













