அது என்ன வாழும் ஷாஜகான் என நினைக்கலாம். நமக்கு தெரிந்த உலக அதிசயங்களுள் ஒன்றான, முகலாய பேரரசர் ஷாஜகானால் தன் மனைவி மும்தாஜ் காக கட்டப்பட்ட ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால் தான். இந்த தாஜ்மஹாலை கட்டும்போது நம்மில் யாருமே பிறந்திருக்கவில்லை. ஆனால்,நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்திலும் ஒருவர் தன் மனைவிக்காக தாஜ்மஹாலை கட்டிக் கொண்டிருக்கிறார்.
ஃபைசல் உசேன் கத்ரி எனும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த 80 வயது முதியவர் தான் அவர். தபால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தன்னுடைய மனைவி தஜா முள்ளி பேகம் நினைவாக ஒரு தாஜ்மஹாலை கட்டி வருகிறார். உசேனுக்கும் தஜா முள்ளி பேகத்திற்கும் 1953இல் திருமணமானது. மனைவி இவரிடம் நமக்குதான் பிள்ளைகள் இல்லையே நாம் இறந்த பிறகு நம்மை யார் நினைவு கொள்வார்கள் என்று வருத்தப்பட்டிருக்கிறார். அதற்கு இவர் எனக்கு முன் நீ இறந்துவிட்டால் உன்னுடைய நினைவாக நான் ஒரு தாஜ்மஹாலை கட்டுவேன் என வாக்களித்திருக்கிறார். சில வருடங்களுக்கு பின்னர் 2011இல் பேகம் இறந்துவிடுகிறார். அவர் இறந்த பிறகு மனைவியின் நினைவாக தன் வாழ்நாள் முழுவதும் சிறிது சிறிதாக சேர்த்த அனைத்து சேமிப்புகளையும் சேர்த்து தன் மனைவிக்காக ஒரு சிறிய தாஜ்மஹால் ஒன்றை 3 ஆண்டுகளாக கட்டியுள்ளார். இந்த தாஜ்மகாலை கான்கிரீட்டால் உறுதியாக கட்டியிருக்கிறார் இதனை சுற்றி இருக்கும் நான்கு தூண்களின் உயரம் 27 அடி. மனைவியின் கல்லறையின் அருகே தனக்கென ஒரு சிறிய இடமும் தான் இறந்த பிறகு புதைப்பதற்காக அமைத்திருக்கிறார்.
இந்த தாஜ்மகாலை சுற்றி அழகிய சிறிய தோட்டமும் மார்பிள் தரையும் போட திட்டமிட்டிருக்கிறார். ஆனால், இதுவரை 11 லட்சங்களை செலவு செய்த பிறகு இந்த மாற்றங்களை செய்ய போதிய பணவசதி இல்லாததால் பணிகளை நிறுத்தி வைத்துள்ளார் இவருக்கு இவரது மனைவியின் மீது உள்ள அன்பை கண்டு வியந்து இந்த தாஜ்மஹாலை கட்ட பண வசதி செய்ய பல பணக்காரர்களும், ஊர்மக்களும் ஏன் அந்த மாநிலத்தின் முதல்வரே முன்வந்தும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
இது என் மனைவிக்காக நான் கட்டும் நினைவிடம் இதனை என் முழு முயற்சியின் மூலம் கிடைத்த பணத்தை கொண்டே கட்டுவேன் என்று சபதம் செய்திருக்கிறார் இந்த முதியவர். அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த அகிலேஷ்யாதவ் இவரை அழைத்து இவரது முயற்சியை பாராட்டி இருக்கிறார் . தானும் இந்த தாஜ்மஹால் முழுமையாக்கி விட்ட பிறகு பார்க்க ஆர்வமாக இருப்பதாக சொல்லியிருக்கிறார். ஒரு பேரரசர் ஆன ஷாஜகானிடம் தாஜ்மஹாலை கட்ட அவரிடம் பண பலமும் ஆள் பலமும் நிறையவே இருந்திருக்கும். ஆனால், ஒரு சாதாரண தனி மனிதன் தன் முழு முயற்சியில் மட்டுமே இந்த தாஜ்மஹாலை கட்டுவது என்பது மிகப்பெரிய விஷயம்தான். இந்த வாழும் ஷாஜகானை பார்க்க பல ஊரிலிருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை என்றாலும் இந்த தாஜ்மஹால் இவர்களது அன்பையும் காதலையும் காலம் காலமாக சொல்லிக்கொண்டிருக்கும் என்பதுதான் உண்மை.



No comments:
Post a Comment